

பெருந்துறை: ஈரொடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தவெக தலைவா் விஜய் பங்கேற்று பேசி வருகிறார்.
புதுச்சேரியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லாத நிலையில் ஈரோட்டில் அதற்கு மாறாக, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டத்தைக் கூட்டி, தன் பலத்தை நிரூபித்துவிட்டார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் என்றே தவெகவினர் கூறிவருகிறார்கள்.
கடந்த வாரம் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, கூட்டத்தில் தவெக தலைவர்கள் பேசிய நிலையில், தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலையில் 9 மணி முதலே, கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான மக்கள் வரத் தொடங்கினர்.
இதுவரை தவெக பிரசாரக் கூட்டங்களில் இல்லாத வகையில், முன்னேற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டது. கட்சியில் தற்போது இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த கூட்டம் பார்க்கப்பட்டதால், பலருக்கும் இந்த கூட்டம் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. அது நிச்சயம் இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றுதான் கூட்டத்துக்கு வந்தவர்கள் சொல்கிறார்கள்.
செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்துள்ளனர். ஒரு பகுதியினர், மற்றொரு பகுதிக்குள் சென்று நெரிசல் ஏற்படாத வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் கொளுத்துவதால் கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பேனர்கள், பறக்கும் டிரோன்கள், தவெக கொடி என தவெக தலைவர் விஜய் பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டிருக்கிறது.
அதிமுகவை, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே, கட்சிக்காக உழைத்தவர் செங்கோட்டையன். அக்கட்சியின் பல்வேறு பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும் வகித்தவர். அண்மைக் காலமாக அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சிகளை எடுத்ததால் கட்சித் தலைமைக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டு, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அடுத்து செங்கோட்டையன் என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜயை நேரில் சந்தித்து, தன்னை தவெகவில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
பணப் பலம், படைப்பலம் இருந்தாலும், பெரிதாக அரசியல் பலம் இல்லாததால், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த தவெகவுக்கும், செங்கோட்டையன் வரவு பெரும் பலமாக மாறியது. அவருக்கு உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில்தான், இதுவரை இல்லாத வகையில், தவெகவின் பிரசாரக் கூட்டம் மிக திட்டமிட்டபடி பெரும் விமர்சனங்கள் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.
There are rumors that unruly volunteers have gathered at the Tavaka meeting, and Sengottaiyan has proven his strength in Erode.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.