மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

கொளத்தூர் நிகழ்ச்சியில் மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
2 min read

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும் அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 18) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, உரையாற்றினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கொளத்தூருக்கு ஒரு சிறப்புண்டு. நான் சில நேரங்களில், அனைத்து அமைச்சர்களிடமும் சொல்வதுண்டு. இன்றைக்கு மாநகராட்சி பள்ளியை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில்தான் அதிகம். மருத்துவமனையை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில்தான் அதிகம். நூல் நிலையங்களை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில்தான் அதிகம். அனைத்திலும் நாம்தான் அதிகம். இன்றைக்கு அந்த அளவிற்கு நம்முடைய திட்டங்கள், சாதனைகளை இந்த தொகுதிக்கு நாம் படைத்து வழங்கியிருக்கிறோம்.

அந்த மகிழ்ச்சியில், இந்த திருமண மாளிகையை திறந்து வைத்து, இன்றைக்கு இல்வாழ்க்கையை தொடங்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நம்முடைய மணமக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம். 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறோம். நீங்கள் எல்லாம் மனதார வாழ்த்த வேண்டும். குறிப்பாக நாம் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு தான் அதிகமான திட்டங்கள், சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், பெண்களை படிக்க வைத்தால், பெண்கள் முன்னேற்றினால், அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் தான். பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் என்னவென்று கேட்டால், பெண்கள் நினைத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள். அதனால் தான் பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தைத் தந்து கொண்டிருக்கிறோம். இன்னும்கூட சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் – நான் மட்டுமல்ல, சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, நேருவாக இருந்தாலும் சரி, இங்கு இருக்கக்கூடிய நீங்களாக இருந்தாலும் சரி.

ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்தபோது, என்னுடைய மனைவி கோபித்துக்கொண்டு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள் – தாங்கிக் கொண்டு, பொறுமையாக இருந்து, எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதுபோலதான் ஒவ்வொருவரும்.

அதனால்தான் மணமக்களிடத்தில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும், அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் மணவிழாவை நடத்தி வைக்கப் போகிறேன். மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, அழகான குழந்தைகளை நீங்கள் பெற்றெடுக்க இருக்கிறீர்கள்.

முன்பெல்லாம் திருமண விழாக்களில் கலந்து கொண்டு பெரியோர்கள் மணமக்களை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்வார்கள். இப்போது என்னவென்றால், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்வதைவிட, அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்று சொல்கிறார்கள்.

முன்பெல்லாம், சிவப்பு முக்கோணம் போட்டு, நாம் இருவர் நமக்கு மூவர் என்று இருந்தது - அது படிப்படியாக குறைந்து, நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்தது – இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் – நாளைக்கு இதுவும் மாறலாம் – நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று ஏன் சொல்வதில்லை என்றால், மணமக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதால்தான். கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள் ஒருமுறை சொல்கின்றபோது சொன்னார் – பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகிய 16 செல்வங்களை பெற்று மணமக்கள் சிறப்போடு வாழவேண்டும் என்பதாகும்.

உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அழகான தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள் என்று மணமக்களை அன்போடு கேட்டுக் கொண்டு, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லிய, வீட்டுக்கு விளக்காக நாட்டிற்குத் தொண்டர்களாக வாழுங்கள்! வாழுங்கள்! வாழுங்கள்! என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com