

வரைவு வாக்காளர் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கடந்த புதன்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று(டிச.17) மாலை ஒவ்வொரு மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 30 சதவிகித வாக்குகள், அதாவது 14,25,018 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிகபட்சமாக அண்ணாநகர் தொகுதியில் 1,18,287 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொகுதிகளைத் தவிர்த்து அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 1,27,521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள மற்ற தொகுதிகள்
ஆர்.கே. நகர் - 56,916,
பெரம்பூர் - 97,345
வில்லிவாக்கம் - 97,960
திரு.வி.க. நகர் - 59,043
எழும்பூர் - 74,858
ராயபுரம் - 51,711
துறைமுகம் - 69,824
ஆயிரம் விளக்கு - 96,981
விருகம்பாக்கம் - 1,10,824
சைதாப்பேட்டை - 87,228
தியாகராயநகர் - 95,999
மயிலாப்பூர் - 87,668
இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 26,375 வாக்காளர்களும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி தொகுதியில் 42,119 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.