

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5 ஆம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி (ரோடு ஷோ), பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, அரசுத் தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், பொதுத் தோ்வெழுதி வெற்றி பெறுவது போன்று உள்ளதாகவும், ஒவ்வொரு பிரிவையும் எதிா்த்து தனித்தனியாக வழக்குத் தொடரும் வகையில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த மாதம் விசாரிக்கப்பட்ட போது, வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தங்களது கட்சிகளின் பரிந்துரை மற்றும் ஆட்சேபணைகளை ஏற்கெனவே அரசுத் தரப்புக்கு கொடுத்துவிட்டதாக தவெக மற்றும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கூறினா்.
இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி அமல்படுத்தப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
அதில், வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதிக்கு முன்னதாக இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று மனுதாரர்களிடம் தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.