100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

100 நாள் வேலைத் திட்டம் மாற்றப்பட்டதைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...
DMK alliance parties protest
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.கோப்புப்படம்
Updated on
1 min read

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய பாஜக அரசு ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டம்' என்ற புதிய பெயரில் ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் ஆதரவளிக்கும் அதிமுகவையும் கண்டித்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தைச் சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாள்களைக் குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, 'கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற  அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியைத் திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் - அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில்  24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும்  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

MGNREGA scheme changed by bjp govt: DMK alliance announces massive protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com