

சிவகளை தொல்லியல் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பல்வேறு அரிய தொல்பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு விரிவாக எடுத்துரைத்தார்.
அதில், நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு செய்யப்பட்டது குறித்தும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கினார்.
தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின் முக்கிய துறைமுகமான கொற்கை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில், “பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இதற்கான துவக்க விழா ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி, சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பொருநை நாகரிகத்தின் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
குறிப்பாக 2019 முதல் 2022 வரை சிவகளை தொல்லியல் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பல்வேறு அரிய தொல்பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் ஏ.வ.வேலுவிற்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சிவகளை அகழாய்வில் ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட உமி நீக்கப்பட்ட நெல்மணிகள் 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பீட்டா அனலடிக் ஆய்வுக்கூடம் (Beta Analytics Laboratory) மூலம் காலக் கணக்கீடு செய்யப்பட்டது என்றும், அதில் அந்த நெல்மணிகள் கி.மு. 1155-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்ட வரலாற்றையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த அறிவியல் சார்ந்த காலக் கணக்கீட்டின் மூலம், பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினர் சுமார் 3200 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் சாகுபடி செய்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, முதுமக்கள் தாழிகள், உயர் தர வெண்கல கலன்கள், இரும்பால் செய்யப்பட்ட கருவிகள், படையல் கலன்கள், பலவண்ண மட்கலன்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொல்பொருட்கள் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்தது அனைவரையும் கவனிக்கச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.