கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்திசையில் வந்த 4 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார், கிளீனராக இளையரசு. இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு சிலிக்கான் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று இரவு இறக்கி உள்ளனர். பின்னர் அங்கு இருந்து துடியலூர் சாலையில் இருந்து சரவணம்பட்டி சாலையை இணைக்கும் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஓட்டுநர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென எதிர் திசையில் சென்றுகொண்டிருந்த நான்கு கார்கள் மீது மோதியது. இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மீது லாரி மோதியபோது அருகே அமர்ந்திருந்த கிளீனர் இளையரசு துரிதமாக செயல்பட்டு பிரேக்கை அழுத்தி லாரியை சாலையின் நடுவே நிறுத்தினார்.
இதனால் மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஓட்டுநர் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லாரி ஓட்டுநர் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.