புதுச்சேரியில் நடைபெற்று வருவது தேஜ கூட்டணி அரசுதான் என்று கூட்டணி குறித்த கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் இதே கூட்டணியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக விரும்புகிறது. ஆனால், பாஜகவுடன் இணக்கம் காட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வர் ரங்கசாமி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் இணக்கமாக ரங்கசாமி பேசவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீன், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
உடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது முதல்வர் இல்லம் அருகே உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து முதல்வரின் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைவரும் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாநில வளர்ச்சி குறித்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினோம்.
தேஜ கூட்டணி அரசு மூலம் புதுச்சேரி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்து சிறப்பான முறையில் செயல்படுத்த முடியும் என்பதனை இந்த அரசு செய்துகொண்டிருக்கும். தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.