

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1. 40 மணிக்கு (7 மணி நேரம் 45 நிமிடங்களில்) சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இரு வழித்தடங்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அதிநவீன வசதி, அதிவேகம், குறைந்த பயண நேரம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளை கொண்டதாக அண்மையில் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கான அனுமதியை மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கியுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்.
எப்போதிலிருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையிலான, 20665/66 என்ற எண் கொண்ட வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்கிற கோரிக்கையினை, அப்பகுதி மக்கள் சார்பாக சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியிருந்தேன்.
விருத்தாசலம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தொழில் மற்றும் பணி நிமித்தமாக விரைவான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய நினைக்கும் விருத்தாச்சலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படும் வகையில், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என்று மத்திய இரயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தமிழக மக்களிடமிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, தொடர்ந்து விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.