

தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவு நேர காப்பகத்தினை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஆரம்பத்தில் இருந்தே எஸ்ஐஆர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். எஸ்ஐஆர் பணிகளுக்கான கால அவகாசம் போதாது என்று சொல்லியிருக்கிறோம்.
பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக பிகாரில் இந்த எஸ்ஐஆர் மூலமாக பலரது வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வாக்குகளை நீக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வாக்குகளும் சென்னையில் அதிகபட்சமாக 14 லட்சம் வாக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்கள், இடம் மாறியவர்கள் ஆகியோரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எங்களுடைய முகவர்கள் மக்களுக்கு உதவுவார்கள்.
மக்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். ஜன. 18 வரை கால அவகாசம் உள்ளது. விடுபட்டவர்கள் பட்டியலில் சேர்க்க படிவங்களை நிரப்பிக்கொடுக்க வேண்டும். எங்களுடைய வாக்குச்சாவடி முகவர்களைத் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.