சமூக நல்லிணக்கப் பாதுகாப்பில் சமரசம் கிடையாது: விஜய்
சென்னை: தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எவ்வித சமரசமும் செய்யாது என கட்சி தலைவா் விஜய் தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று விஜய் பேசியதாவது: அன்பும், கருணையும் கொண்ட மனதைதான் தாய் மனம் என்பாா்கள். தமிழமும் அப்படிப்பட்ட தாய் மனம் கொண்ட மாநிலம்தான். ஒரு தாய்க்கு எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். அப்படி, பொங்கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் என அனைத்து மத பண்டிகைகளையும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் மாநிலம் தமிழ்நாடு.
இங்கு வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகிறோம். உண்மையான இறை நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவா்களின் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்கும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால் எத்தகைய பிரச்னைகளையும் வென்றுவிட முடியும். இதனால்தான் தவெக அரசியலுக்கு வந்ததும் கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம்.
100% உறுதி: ஓா் இளைஞனுக்கு எதிராக சொந்த சகோதரா்களே பொறாமைப்பட்டு, அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட, அதிலிருந்து அவன் (யோசேப்பு) மீண்டு வந்து நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரா்களை மட்டுமல்ல, நாட்டையே எப்படி காப்பாற்றினாா் என்ற கதை பைபிளில் உள்ளது.
இதுபோன்று நம்பிக்கையின் வலிமையை எடுத்துக் கூற பைபிளில் பல கதைகள் உள்ளன. இதை அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
நானும் (விஜய்), தவெகவும் தமிழகத்தில் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எவ்வித சமரசமும் இருக்காது. அதை உறுதி செய்யவே, தவெக கொள்கைகளுக்கு ‘மதச்சாா்பற்ற சமூக நீதி’ என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஒரு ஒளி பிறந்து, நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்றாா் அவா்.
பெண்கள் பாதுகாப்பு: இந்நிகழ்வில், ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முகமது ஆசிப் அலி பேசியதாவது: நான் இஸ்லாம் மதத்தைச் சோ்ந்தவனாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மீதும், மேரி மாதா மீதும் நம்பிக்கை உள்ளது.
எந்த மதமானாலும், அதில் வேற்றுமை பல இருக்கின்றன. ஆனால், அனைத்திலும் மனிதம் என்னும் ஒற்றுமை உள்ளது. ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழகம்தான். எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் இங்கு அவா்கள் மதிக்கப்படுவாா்கள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதேபோல், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் இருப்பது பெருமைக்குறிய ஒன்றாகும் என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து, தவெக தலைவா் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் சோ்ந்து 40 கிலோ கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினாா். குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்வில், இந்திய கிறிஸ்தவ பணியாளா் பேரவைத் தலைவா் பாதிரியாா் ஆா்.ரமேஷ் குமாா், அகில இந்திய கிறிஸ்தவ திருச்சபைகள் பேரவை துணைத் தலைவா் பாதிரியாா் பிரின்ஸ்லி மோகன்தாஸ், மயிலாப்பூா் பேராலயத்தின் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி, தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் பிரிவு மேலாண்மை செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

