

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிச., 23) தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் வரையும், ராமதாஸ் - அன்புமணி என இரு தரப்புக்கும் 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் நயினார் நாகேந்திரன் இந்த விளக்கத்தை அளித்தார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று (டிச., 23) காலை தமிழகத்திற்கு வருகைத்தந்தார்.
பாஜக நிர்வாகிகளின் மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆலோசனையில் பேசியவை குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
''பியூஷ் கோயலுடன் அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசினோம். வாக்கு சதவீதம், நடந்துமுடிந்த தேர்தல் விவரங்கள் குறித்து மட்டுமே பேசினோம். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்து எதுவும் பேசவில்லை.
அரசியல் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடுகள் குறித்து எதுவும் பேசவில்லை. பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி கே பழனிசாமியுடன் பேசவில்லை.
திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒத்தக் கருத்து கொண்டவர்கள் ஒன்று சேர வேண்டும்.
யூடியூபில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதோடுமட்டுமின்றி இப்போது அனைவரும் கருத்துக்கணிப்புகளை நடத்துகின்றனர். இதனை கருத்தில் கொள்ள முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.