

சத்தீஸ்கர், அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை, எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாமில் நல்பாரி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்கள் உள்ளிட்ட அலங்கார ஏற்பாடுகளை விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலும் கிறிஸ்தவ கொண்டாட்டங்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
எனவே, நாட்டு மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.