

சேலத்தில் நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் டிச. 29 ஆம் தேதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் ஜி.கே. மணி பேசுகையில், ``சேலத்தில் டிச. 29-ல் பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டம் திட்டமிட்டபடி, சரியாக நடக்கும். 2026 பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ராமதாஸின் அறிவிப்புக்கு தேசிய, மாநில அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மேலும், ராமதாஸ் கூட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று அன்புமணி கூறியதைக் கண்டித்து, ``பொதுக்குழுக் கூட்டம் நடத்த மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. அவர் நடத்துகிற கூட்டம் செல்லாது; அது ஏற்புடையதல்லை. எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொல்வது எவ்வளவு அநாகரிகமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இயக்கத்தைத் தொடங்கியது யார்? எவ்வளவு ஆண்டுகாலப் போராட்டம்? பாமகவில் இருப்பவர்களெல்லாம் ராமதாஸ் பின்னால்தான். அவர் சொன்னால்தான் வாக்களிப்பார்கள்’’ என்றும் ஜி.கே. மணி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.