தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த கட்சி இதுபோன்ற செய்தியை வெளியிட்டதோ அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கி, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக, பாஜக இடையே நடந்த சந்திப்பு என்பது ஏற்கெனவே அந்த இரு கட்சிகளிடையே அமைந்த கூட்டணி என்ற அடிப்படையிலானது.
எந்தக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அவர்களது விருப்பத்தின்படிதான் முடிவு எடுக்கப்படும்.
அந்த வகையில், வரும் ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
மேலும், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்குப் பதிலளித்த அவர், ”இப்படி அவசரப்பட்டு செய்திகளை வெளியிட்டால், எந்த கட்சி இதுபோன்ற வெளியிட்டதோ அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
அதிமுக - பாஜக இடையேதான் ஆலோசனை நடைபெற்றது. இதுபோன்ற அறிவிப்பை அதிமுக, பாஜக கட்சியில் உள்ள நிர்வாகிகளோ, தொண்டர்களோ ஏற்றுக் கொள்வார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.