

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை தனது குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை பஞ்சபூதங்களில் நீர் தளத்திற்கு உகந்த தளமாக திகழக்கூடிய திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் மரியாதை அளித்தனர். இதனைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற ஜெய்சங்கர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். இதையடுத்து ராஜகோபுரம் பின்புறம் தெரியும் இடத்தில் நின்று தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்த அவர், மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து, 10ஆவது நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் உற்சவர் நம் பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அங்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாமி தரிசனம் செய்த பின் ஆரியபட்டால் வாசலில் இருந்து நடந்து சென்று தாயார் சன்னதிக்கு சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கம்பர் மண்டபத்தை பார்வையிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் வரலாற்று சிறப்புகள் மற்றும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து தலைமை பட்டர் சுந்தர், கோவிந்தராஜ் எடுத்துரைத்தனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இன்று தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக கோயில் வளாகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் வருகையால் மாவட்ட ஆட்சியர் சாலையில் இருந்து திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் முழுவதும் சாலையில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.