

திமுக என்ற என்ஜின் இல்லாத காரை கூட்டணி என்கிற லாரி 10 ஆண்டுகளாக இழுத்துச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணி என்ற லாரியில் அடிக்கடி பழுது ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த கூட்டணி நிலைக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை விமர்சித்து அவர் பேசியதாவது,
சென்னை மாநகரப் பேருந்துகள் தரம் குறைந்து காணப்படுகின்றன. அதில் இலவசமாகப் பயணிக்கும் பெண்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
ஒப்பந்த செவிலியர்கள் போராடி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை. ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் என்பதால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு மறுக்கிறது.
கிட்னி முறைகேடு விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அது எம்.எல்.ஏ.வின் மருத்துவமனை என்பதால் அரசு தயங்குகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்தது அதிமுக. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.
கரோனா காலத்தில் ஏழை மக்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காக 11 மாதங்கள் விலையில்லா பொருள்கள் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 2 ஆயிரம் கொடுத்தோம். அப்போது ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என திமுக கோரியது. ஆனால், தற்போது அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ரூ. 5 ஆயிரம் கொடுக்கத் தயங்குகிறார்கள்.
திமுக ஆட்சியில் சிமெண்ட், ஜல்லி, கம்பி, செங்கல் விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் வீடு கட்ட வேண்டுமென்றால் இனி கனவில்தான் நடக்கும். அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய மக்கள் தயாராகிவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.