

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்ததால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பிருந்த ஆண்டாள், பங்குனி உத்திரம் நாளில் ரெங்கநாதரை மணம் புரிந்தார் என்பது ஸ்தல வரலாறு. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் பரமபத வாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழா கடந்த 20 ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. பகல் 10 காலை ஆண்டாள் ரங்கமன்னார் புறப்பாடாகி பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு தமிழகத்தின் முதல் கோயிலாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
அதிகாலை 3.30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பரமபத வாசல் அருகே அரையர் வியாக்ஞனமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.