

இந்தியர்களின் வாழ்விலும், கலாசாரத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மதிப்புமிக்க மஞ்சள் உலோகம். தங்கத்தின் விலை இந்தாண்டு (2025) அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
முதலீடு, ஆபரணம், சொத்து என அனைத்து வகையிலும் பயனுடையதாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க உச்சத்தை அடைந்து எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கான காரணங்கள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயார்ந்து வருகிறது.
ரூபாய் மதிப்பானது குறையும்போது, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிமாக சேமித்து வைப்பதும் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகிறது. போர்ப்பதற்றம், புவிசார் அரசியல் போன்றவற்றால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
அதுவும் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில், தங்கம் விலை நாள்தோறும் ஆயிரத்தில் உயர்ந்து வருகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, உலக நாடுகளுக்கு அவர் விதிக்கும் வரி விதிப்புகள் காரணமாக, உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை உருவானதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக உருவெடுத்துள்ளது.
தங்கத்தின் மீது கடன்
தங்க நகைக் கடனை ஊக்குவிக்கும் நடவடிக்கையை ஆர்பிஐ மேற்கொண்டது. தங்க நகைக்கு அதன் மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு மட்டும் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் அளிக்கப்படுகிறது.
ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே இந்த 85 சதவீத மதிப்பில் கடன் வழங்கப்படும் என்று ஆர்பிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு நடுத்தர வகுப்பு மக்களுக்கு பயனுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88 சதவீதம் அளவுக்கு கடன் வழங்குகின்றன.
கடந்து வந்த பாதை
நிகழாண்டு தொடக்கத்தில் (ஜன. 1) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை ஜன. 16-ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120-க்கு விற்பனையானது.
அதன் பின்னர் தொடர்ந்து உயர்ந்துவந்த தங்கத்தின் விலை, ஜன. 22 ஆம் தேதி வரலாறு காணாத அளவில் ரூ. 60,200-க்கு விற்பனையானது.
இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து, வரலாற்றில் முதல் முறையாக கடந்த பிப். 11 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ.64,000-ஐ கடந்தது. பின்னர் பிப். 20ஆம் தேதி சவரன் ரூ.64,560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மார்ச் 14 ஆம் தேதி ரூ. 66,400-க்கும் விற்பனையானது.
தங்கத்தின் விலை ஏப். 12 ஆம் தேதி புதிய உச்சமாக ரூ. 70,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை மே 8-ல் சவரன் ரூ. 73,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
புதிய உச்சத்தை ஒரு முறை தொட்டுவிட்டு, தொடர்ந்து உயர்வைக் கண்டால், அது நாள்தோறும் புதிய உச்சமாகவே இருக்குமல்லவா? அதுதான் தங்கம் விலையிலும் நடந்தது.
அமெரிக்காவின் 50% கூடுதல் வரி
இதற்கிடையே, மே மாதம் அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரி விதிப்பு பேச்சுவாா்த்தை முடிவுக்கு வந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் பதிலாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியதால் மே 16 ஆம் தேதி ரூ. 70 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
தங்கத்தின் விலையானது ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா மீதான அமெரிக்க அரசின் 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டது.
இதன் காரணமாக, வர்த்தகம் தொடங்கும்போது மட்டுமே ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம், வர்த்தகம் நிறைவடையும் தருவாயிலும் தங்கத்தின் விலை ஆயிரணக்கணக்கில் உயர்ந்து செப். 6-இல் ரூ. 80,040, செப். 23-இல் ரூ. 85,120, அக். 7-இல் ரூ. 89,600க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு
இதனிடையே, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு, உலக நாடுகளின் மீது அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து, அக். 8 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனையானது. தொடர்ந்து, அக். 16-இல் ரூ.95,200-க்கு விற்பனையானது.
அதன்பின் ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த டிச.12-ல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயா்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.
இப்படியாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, டிச. 15 ஆம் தேதி ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
இந்தாண்டின் நிறைவு நாளான இன்று (டிச. 31) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,00,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொன்னில் போட்டது வீணாகாது
தங்கம் விலை உயர்வு காரணமாக சில வாரங்களுக்கு மக்கள் நகை வாங்க செல்லாமல் இருக்கலாம், நாளடைவில் மக்கள் இதைப்புரிந்து மீண்டும் வழக்கம்போல் ஆபரணங்களை வாங்கத் தொடங்கிவிடுவார்கள்.
தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் தென்படாவிட்டாலும், தங்கத்தை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகாது என்பது பழமொழி; விவசாயத்தில் மண்ணில் போட்ட நெல்லும், பொருளாதாரத்தில் தங்கம் வாங்குவதும் என்றைக்கும் வீண் போகாது, லாபம் தரும்.
வரும் புத்தாண்டு முதல் ஒவ்வொரு கிராம் தங்கம் அல்லது சிறு தொகையையாவது தங்கத்தில் முதலீடு செய்வோம். சிறுதுளிதான் பெரு வெள்ளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.