

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. (குறள் - 247)
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தெய்வப் புலவராம் திருவள்ளுவரின் குறள் வரி!
அருள் இல்லாதவருக்கு அவ்வுலகத்து வாழ்வு இல்லை; ஆனால், பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகத்துக்கு வாழ்க்கையே இல்லை என்பதை அப்போதே சுட்டிக் காட்டியிருக்கிறார் அய்யன் வள்ளுவர். பொருளீட்டுவதும், சொத்து சேர்ப்பதும், ஆபரணங்கள் மீதான மோகமும் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நாம் பயன்படுத்தும் முதன்மை உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை மற்றும் முதலீடு உள்ளிட்ட இன்ன பிற காரணங்களால் இந்த இரு உலோகங்களுக்கும் ‘ஜாக்பாட்’ ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் “கிடுகிடுவென... ராக்கெட் வேகத்தில்... வராலாறு காணாத... புதிய உச்சத்தில்...” என ‘தங்கம் விலை’ ஒரு பக்கமிருந்தாலும், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் திடீரென அனைவரின் கண்ணும் அந்த சாம்பல் நிற ‘பளீச்’ உலோகமான வெள்ளியின் பக்கம் திரும்பியிருப்பதுதான் அந்தக் ‘கிடுகிடு’ விலை உயர்வுகளுக்கு காரணமாக அமைந்தது.
2025 புத்தாண்டு அன்று (ஜனவரி 1) ஒரு கிராம் 93 ரூபாயாக இருந்த வெள்ளி, நாள்தோறும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஏறிக்கொண்டிருந்தது. ஆனால், டிசம்பரில் ரூ. 285 வரை உயர்ந்தது; கிலோவுக்கு ரூ. 9,000, ரூ. 11,000 எனவும் வேகமாக எகிறத் தொடங்கியது.
கிறிஸ்துமஸ் நேரத்தில் ‘கிடுகிடு’வென 255 ரூபாய் வரை உயர்ந்தது. குறிப்பிடத்தக்க உச்சமாக டிசம்பர் 27 ஆம் தேதி ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் உயர்ந்து ரூ. 2.74 லட்சத்துக்கும் விற்பனையானது.
அதோடு நின்றுவிடவில்லை; அதே நாள் மாலையில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்து ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 31,000 உயர்ந்து, கிராமுக்கு ரூ.285 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரே ஆண்டில் 200 மடங்குக்கும் அதிகமான விலை ஏற்றத்தைக் கண்டிருக்கிறது வெள்ளி.
கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 24,000 மடங்கு வெள்ளி விலை உயர்ந்திருக்கிறது. 5 ஆண்டுகளில் 330 சதவிகிதம். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம். ஒரே நாளில் வெள்ளி 8 சதவிகிதம் லாபத்தைக் கொடுத்ததும் அன்றே முதல்முறை.
சில்வர் தர்ஸ்டே!
இது வரலாறு காணாத உச்சமாக இருக்கலாம். ஆனால், வெள்ளி கடந்து வந்ததையும் சற்று வரலாற்றைத் திரும்பி பார்ப்பதும் இந்த நேரத்தில் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன் இதே ‘கிடுகிடு’விலை உயர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வணிகர்களான ‘ஹண்ட் பிரதர்ஸ்’ என்ற இரு சகோதரர்கள் மற்றும் டெக்சாஸ் எண்ணெய் அதிபர்கள் நெல்சன் பங்கர் ஹண்ட் - வில்லியம் ஹெர்பர்ட் ஹண்ட் இருவரும் சேர்ந்து வெள்ளிக்கான தேவையை அதிகரிப்பதற்காக அதை முடக்கிவைக்க முயன்றிருக்கின்றனர்.
இதனால், 1979-ல் ஒரு டிராய் அவுன்ஸ் (30 கிராம்) 6 டாலரில் இருந்து 1980 மார்ச் 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரே ஆண்டில் 49.5 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. ஓராண்டில் 713 சதவிகிதம் அளவுக்கான உயர்வு. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு வெள்ளிக்கான கடுமையான விதிகளை விதிக்க, வசமாக மாட்டிக்கொண்ட ஹண்ட் பிரதர்ஸால் வெள்ளி விலை எகிறிய வேகத்திலேயே மீண்டும் 4 டாலர்களுக்கு வந்திறங்கியிருக்கிறது. வெள்ளியை நம்பி அப்போது முதலீடு செய்தவர்களுக்கு ‘கோவிந்தா’தான். அதே நிலைதான் இப்போதும் தொடருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
1979 ல் தங்கம் 60 சதவிகிதம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போதுதான் அந்த நிலையை எட்டியிருக்கிறது.
பின்னர் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்திருந்தாலும், தங்கம் மத்திய வங்கிகளின் கையிருப்பு காரணமாகவும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே விலையில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் மீண்டும் அந்த நிலையை எட்டுவதற்கு காப்பாற்றியிருக்கிறது.
ஆனால், வெள்ளி ஒருமுறை கிடுகிடுவென ஏறி கீழே விழுந்தால் எழுவதற்குப் பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விழுந்தால் பெரியளவிலான இழப்பைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
வெள்ளியின் விலை, 2011-ல் ஒரு அவுன்ஸ் 48 டாலர் வரை சென்று, மீண்டும் 12 டாலர்களிலும், 2020ல் ஒரு அவுன்ஸ் 30 டாலர்கள் வரை சென்று மீண்டும் 18 டாலர்களில் வந்து விழுந்ததும் வரலாறுதான்.
டிரம்ப்பின் வருகையும் வெள்ளியின் உயர்வும்
தங்கம், வெள்ளி விலை உயர்வை டிரம்ப் வருகைக்கு முன், பின் என எளிமையாகப் பிரிக்கலாம். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், ஜனவரியில் பதவியேற்ற பின்னர் டாலர் மீதான நம்பிக்கைக் குறைவு, கடுமையான வரிவிதிப்பால் சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் முடிந்தவரை தங்கத்தின் கையிருப்பை அதிகப்படுத்தியதன் விளைவு தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு வழிவகுத்ததும் சிறு முதலீட்டாளர்கள், தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியைப் பார்த்ததும் மிகப் பெரிய விலையேற்றத்துக்கு வழிகோலியிருக்கிறது.
அமெரிக்காவின் டாலருக்கு நிகராகவே கச்சா எண்ணெய் உள்ளிட்ட அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. அதிபர் டிரம்ப்பின் வருகைக்குப் பின்னர், டாலர் மீதான நம்பிக்கைக் குறைவு காரணமாக அதற்கு நேரெதிரான இருப்பு நாணயமாக (Reserve Currency) தங்கத்தில் முதலீடு செய்ததும், இதனால் கடும் விலையேற்றத்தால் மாற்றாக முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கிப் படையெடுத்ததும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மற்ற நாடுகள் மீதான கடுமையான வரிவிதிப்புகள், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றால் அமெரிக்காவில் 4 சதவிகிதம் அளவிற்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டால், தங்கம், வெள்ளி விலை மேலும் ஏறிக்கொண்டுதானிருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எங்கோ இருக்கும் அமெரிக்கா; கிட்டத்தட்ட 12,000 கி.மீட்டருக்கு அந்தப் பக்கம். ‘அங்கு ஆட்சியில் இருக்கும் அதிபர் ஒருவர் அவரு ஊருல இருக்குற பேங்க்-ல வட்டி விகிதத்த குறைச்சா தங்கமும் வெள்ளியும் ஏம்பா ஏறுது-னு கடைக்கோடியில் இருப்பவனுக்கும் கவலை வரத்தானே செய்யும்’. ஆனால், வெள்ளி, தங்கத்தின் விலைகள் உலகளவிலான தேவையைச் சார்ந்தே இருக்கின்றன.
சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை தினமும் மாறுபடுகிறது. லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷனின் தங்கம் - வெள்ளிக்கான தேவையைப் பொருத்து தினமும் காலை, மாலை என இருவேளையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
பொருளாதார சூழல், அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம், வெள்ளியில் முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விலைகள் தீா்மானிக்கப்படுகின்றன.
திடீர் விலை ஏற்றம் ஏன்?
நமக்குத் தெரிந்தது எல்லாம் வெள்ளியில் மோதிரம், கொலுசு, செயின், பாத்திரங்கள், சில வீடுகளில் சாமி சிலைகள், விளக்குகள், கோயில்களில் சிலைகளுக்கான கவசங்களில் பயன்படுத்தப்படுவதுதான்.
ராக்கெட் வேகத்தில் நாள்தோறும் விலை ஏறுவதைப் பற்றி தெரிந்துகொண்ட நாம் என்றாவது ராக்கெட்டில் வெள்ளி பயன்படுத்துவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆம், ராக்கெட்டுகளில் வெப்பக் கடத்துதலைத் தடுக்கவும், மின்னணு போர்டுகளிலும், செயற்கைக் கோள்களிலும் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சீனா தங்கம் வாங்கிக் குவிப்பதும் பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை உயர்த்தி வருவதும் தங்கம் விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம். ஆனால், பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக மின் வாகனங்களின் உற்பத்தியும் வெள்ளிக்கான மவுசைக் கூட்டிவிட்டிருக்கிறது.
குறிப்பிடத்தக்க சில தரவுகளின்படி, அமெரிக்காவில் தொழிற்சாலைப் பயன்பாட்டில் 58 சதவிகிதம் வெள்ளியே முதன்மையான உலோகமாக இருக்கிறது [அதிகளவிலான வெள்ளி உற்பத்தியில் (எடுப்பதில்) மெக்சிகோ இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 9-வது இடத்திலும் இருக்கின்றன]
உச்சம் தொட்ட வெள்ளியின் தேவை
பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின் தகடுகள் உற்பத்தி, மின்னணு வாகனங்கள் உற்பத்தி, மின்துறை, 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி போன்றவை உலகளவில் வெள்ளி கிடைக்கும் அளவுக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள்தான் வெள்ளி விலையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தங்கம் முதலீடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெள்ளி முதலீடு மட்டுமன்றி, தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டுமல்ல, இயந்திரங்கள், ரோபோட்கள், செல்போன்கள், அவ்வளவு ஏன் மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய மின்தகடு, லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் என அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கார்களில் மட்டுமின்றி, கிருமிகளையும் கொல்லும் வெள்ளி, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவமனை கருவிகள், மருந்துகள், சிகிச்சை அளிக்கும் கருவிகளில் வெள்ளி இருக்கிறது. பல காலமாக மருத்துவத் துறை வெள்ளியை நம்பியே இருக்கிறது. செய்யறிவால் உருவாக்கப்படும் ரோபோட்டுகள் இயங்கத் தேவையான சிப்களில் வெள்ளி இருக்கிறது. வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தப் பயன்பாடுகளிலிருந்து தொழிற்சாலைகள் வெள்ளியை இப்போதைக்கு மாற்ற முடியாது. வெள்ளியின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், விலை உயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
ஒரே உலோகம் விலை உயர்ந்த ஆபரணங்கள் தயாரிக்கவும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதில் முதலிடம் எப்போதும் வெள்ளிக்குத்தான். வீட்டுப் பயன்பாடு என்றாலும் விண்வெளி பயன்பாடு என்றாலும் முன்னணியில் இருப்பது இந்த வெளீர் சாம்பல் நிற உலோகம்தான்.
மின்சக்தி தயாரிக்கும் சூரிய ஒளி தகடுகளில் ஒவ்வொரு சோலார் தகடுகளுக்கும் 20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் நாள்தோறும் பல லட்சக்கணக்கான சூரிய ஒளி தகடுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதிக சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும்போது, அதிக வெள்ளியும் பயன்படுத்தப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் சோலார் துறையில் வெள்ளி பயன்பாடு 4,000 டன் (140 மில்லியன் அவுன்ஸ்) இருந்த நிலையில், 2024-ல் அது 5,500 டன்னாக (190 மில்லியன் அவுன்ஸுக்கு) உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
மின்சாரத்தில் இயங்கும் கார்களில் வெள்ளி இருக்கிறது. ஒவ்வொரு மின்கார கார்களிலும் 20 முதல் 50 கிராம் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரண கார்களைவிட 3 மடங்கு வெள்ளிப் பயன்பாடு அதிகம். 5ஜி டவர்களில்கூட வெள்ளி இடம்பெறுகிறது. வேறு ஒரு உலோகத்தால், இவ்விடங்களில் வெள்ளியின் பயன்பாட்டை மாற்றவே முடியாது.
மின்சார கார்களின் வருகை
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் 9 நிமிஷங்கள் சார்ஜ் ஏற்றினால் 600 கி.மீ. செல்லக்கூடிய மின்சாரக் காருக்கான 100 கிலோ வாட் பேட்டரி ஒன்றைத் தயாரித்திருக்கிறது. இதில் ஒரு காருக்கு மட்டும் ஒரு கிலோ அளவுக்கு வெள்ளி தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், 16,000 மெட்ரிக் டன்னாக இருந்த வெள்ளியின் தேவை ஆண்டொன்றுக்கு 25,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2020 ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி வெறும் ரூ. 39,000 -க்கு மட்டுமே விற்பனையான நிலையில், இப்போது 7 மடங்கு விலை உயர்ந்து (டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி), ஒரு கிலோ ரூ. 2.85 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தங்கத்துக்கு நிகரான அளவில் வெள்ளி விலை உயர்வது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
சரிவை எதிர்நோக்கி...
தங்கம், வெள்ளியின் விலை சாட்சுரேஷன் பாய்ண்ட்டை (அவற்றின் உச்சத்தை) எட்டிவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். மேலும், தங்கம், வெள்ளிக்கான விலைக்கான Bubble (பபுள்) விரைவிலேயே வெடிக்கும். இதனால், மிகப் பெரிய சரிவைச் சந்திக்கவிருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஆனால், தொடர் விலை ஏற்றத்தால் “என் ஹார்ட்டே வெடிச்சிரும் போல..” என சொல்ல வைத்திருக்கின்றன இந்த உலோகங்கள்.
உலகளாவிய பரிவர்த்தனைகள், முதலீடுகள் மற்றும் சர்வதேச கடன்களை எளிதாக்குவதற்காக மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பு நாணயமாக சேமித்து வைத்துக் கொள்கின்றன. அதன் காரணமாக தங்கம் விலை எப்போதும் நிலையாக உயர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் வெள்ளி அப்படியல்ல; அது தங்கத்தைவிட அதிக நிலையற்ற தன்மை கொண்டதால், வெள்ளி விலை சில நேரங்களில் தொடர்ந்து உயரும், அதேபோல் திடீரென இரட்டிப்பு அளவில் சரிவதும் உண்டு.
இதற்கிடையில், சௌதி அரேபிய மத்திய வங்கியோ தங்கத்துக்கு மாற்றாக, வெள்ளியை வாங்கி, வெள்ளி கையிருப்பை உயர்த்தி வருகிறது. சௌதி அரேபியா போலவே, உலகளவில், வெள்ளி உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தின் பலனை பயன்படுத்த பல உலக நாடுகளும் வெள்ளியைக் கையிருப்பில் வைத்திருக்க முனைப்புக் காட்டி வருகின்றன.
தொழிற்சாலை பயன்பாடுகளில் வெள்ளியின் தேவை கடுமையான அதிகரித்து, அதற்கேற்ற விநியோகம் இல்லாததால் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,000 -ஐ கடந்துள்ளதால் சாதாரண மக்களுக்கு தங்கம் வாங்குவது மிகவும் கடினமாகியுள்ளது.
முன்பு பெரும்பாலானோர் வெள்ளி நகைகளை விரும்பாமல் இருந்தாலும், தற்போது தங்கம் விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியை வாங்க முனைப்பு காட்டுகின்றனர். இதனால், விலை மேலும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்பெல்லாம் வங்கிகள் தங்கத்தை மட்டுமே அடமானமாக ஏற்றுக் கொண்டன. தற்போது 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை அடமானமாக ஏற்கும் வாய்ப்பை இந்திய ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளில் பரிசீலித்து வருகிறது. நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்தைவிட வெள்ளி நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செக் வைக்கும் சீனா!
தங்கத்தை வாங்கிக் குவித்த சீனா, தற்போது வெள்ளியின் தேவையை அறிந்து தனது கவனத்தை வெள்ளியின் பக்கம் திருப்பத் தொடங்கிவிட்டது.
2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளி ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ள சீனா, ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளையும் போட்டுவிட்டது. ஏற்கெனவே, உலகளாவிய வெள்ளிக்கான பற்றாக்குறை 2,500 டன்னாக இருக்கிறது. சீனாவின் தடையால் வெள்ளியின் பற்றாக்குறை 5,000 டன்னாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வெள்ளி உற்பத்தி செய்யும் சிறிய நிறுவனங்கள் அதை விற்பனை செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்றும், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் வெள்ளி ஏற்றுமதி செய்ய அனுமதி என்றும் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 80 டன் வெள்ளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தகவல்கள் கூறுகின்றன.
வெள்ளி உற்பத்தியில் உலகின் இரண்டாமிடத்தில் இருக்கும் சீனா, தனது வளங்களைக் காக்கவும், வெள்ளியின் தேவையைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், இதன் மூலம் பிற நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நினைப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தீர்வுதான் என்ன?
வரலாற்றில் இல்லாத உச்சமாக கடந்த வாரத்தில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 70 டாலரைக் கடந்தது. இதுகுறித்து மனம் திறந்த ‘பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை’ (Rich Dad Poor Dad - ரிச் டாட் பூவர் டாட்) - புத்தகத்தின் ஆசிரியரும், அமெரிக்காவின் தொழிலதிபருமான ராபர்ட் கியோஸகி தனது எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 25 ஆம் தேதி பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “வெள்ளி வாங்குவதற்கான காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஒரு அவுன்ஸ் ஒரு டாலருக்கும் குறைவாக இருந்த 1965 காலகட்டத்திலேயே வெள்ளியில் பெருமளவு முதலீடு செய்துவிட்டேனென சிலாகிக்கும் அவர், அதோடு மட்டும் விட்டுவிடாமல், 2026 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 200 டாலரைக் கடக்கும் என்றும் கணித்திருக்கிறார். வெள்ளி வாங்குவது உங்களை எளிதில் பணக்காரர் ஆக்கும் என்றும்” குறிப்பிட்டிருக்கிறார்.
[அவர் சொல்லும்படி கணக்கு வைத்துக்கொண்டால், ஒரு கிலோ வெள்ளி இன்றைய டாலருக்கு நிகரான மதிப்பில், ஆறே கால் லட்சம் மற்றும் சில சொச்சத்தை எட்டும். ஆனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பும் தகிடுதத்தம் போடுவதால் நிச்சயமாக கிலோ ரூ. 7 லட்சத்தையும், ஒரு கிராம் ரூ. 700-ஐயும் எட்டும்.]
மாற்று வழி
இல்லத்தரசிகள், பெண் பிள்ளைகள் வைத்திருப்போர் தங்கத்தின் விலையால் மிகப் பெரிய கலக்கத்தில் இருக்கும் சூழலில் வெள்ளி விலையும் விண்ணை முட்டுவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலதான் இருக்கிறது. இருப்பினும், நீண்டகால தேவைகளுக்காக முதலீடு செய்ய விரும்புவோருக்கு பங்குச் சந்தையில் கோல்டு ETF, சில்வர் ETF போன்றவற்றையும் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், கோட்டக் மஹிந்திரா போன்ற நிறுவனங்களில் மொத்தமான முதலீடுகளை - Lumpsum (லம்சம்) தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை
டிச. 28 ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் சந்தித்துப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட ரஷியா - உக்ரைன் இருநாடுகளும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாகவே கருதப்படுகிறது. இது திங்கள்கிழமை பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இந்தாண்டின் கடைசி செவ்வாய்க்கிழமையான (டிச. 30) இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360-ம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 23,000-ம் ஒரே அடியாக குறைந்தது.
சீனாவின் வெள்ளி ஏற்றுமதித் தடை அறிப்பைத் தொடர்ந்து, விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் உள்ள சிகாகோ மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச் - (CME Exchange), வெள்ளி வர்த்தகத்துக்கான இருப்புத் தொகையை 20 ஆயிரம் டாலரில் இருந்து 25 ஆயிரம் டாலராக உயர்த்தியதால், சிறு முதலீட்டாளர்கள் பலரும் பின்வாங்கியுள்ளனர்.
நீண்டகால முதலீட்டை நோக்கிப் பயணிப்பவர்கள் முடிந்தவரை இப்போதே 999 காரட் நாணயமாகவோ அல்லது நல்ல பொருளாதார வல்லுநரின் வழிகாட்டுதலின் படி சில்வர் ETF-களாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
இந்தாண்டு வெள்ளிக்கு மிகப் பெரிய ஏற்றமான ஆண்டாக இருந்தாலும், பொருளாதார நிபுணர் கோல்டுமேன் சாச்சும் அடுத்தாண்டிலும் தங்கம் - வெள்ளியின் விலை பிரகாசிக்கும் என்று சூசகமாகக் கூறியிருக்கிறார்.
முடிந்தவரை ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே முதலீடு செய்ய முயற்சிப்போம், கையில் பணம் இருந்தால் - பியூச்சருக்கு உதவும்! வெள்ளி போல பிரகாசிக்கட்டும் - 2026!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.