சுயமாக முடிவு; 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காதது ஏன்?- ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
சுயமாக முடிவு; 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காதது ஏன்?- ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!
Published on
Updated on
1 min read

ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

இதுதொடர்பான வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்ற நிலையில் ஆளுநரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

'தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ரவி மௌனமாக இருக்கலாமா? ஆளுநர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதற்கு விடை காண வேண்டும். தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பது மாநில அரசுக்கு எவ்வாறு தெரியும்?' என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.

தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெற்ற வழக்கின் வாதத்தின்போது நீதிபதிகள், "ஆளுநர் பதவியை, அவரது அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏன் 12 மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் 2 மசோதாக்களை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்க மறுக்கிறார்?

ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் என்றால், எந்த பிரிவின் படி செய்தார்? அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், "தமிழ்நாடு ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். ஏன் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் என்பதற்கு ஆளுநர் விளக்கம் தெரிவிக்க வேண்டும். 3 ஆண்டுகளாக விசாரித்து வரும் மசோதாக்களில் அப்படியென்ன மோசமான விஷயம் இருக்கிறது?

எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இன்றி ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது.

10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தை ஆளுநர் கூற வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை நாளை(வெள்ளிக்கிழமை) காலைக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com