தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு...
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு துவக்க விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி நிறுவனரும், முதல்வருமான ரங்கசாமி கட்சிக் கொடியை ஏற்றிவைத்து காந்தி, காமராஜர் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:

”கட்சியின் வளர்ச்சி அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் உள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம். அதற்காக இன்றுமுதல் அனைவரும் பாடுபட வேண்டும்.

சற்குரு அப்பாசாமி மற்றும் சற்குரு அழுக்கு சாமியின் ஆசியுடன் கட்சி துவங்கப்பட்டது. கூட்டணி கட்சியோடு இணைந்து ஆட்சி நடத்தி வருகிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கூட்டணியை வைத்து ஆட்சி அமைத்தால்தான் புதுச்சேரி வளர்ச்சிபெறும் என அனைவருக்கும் தெரியும்.

கடந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்தார்கள். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு மீது ஏதாவது குறை சொல்ல முடியுமா..? விண்ணப்பித்த உடனே நலத்திட்டங்கள் கிடைப்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர். எதிர்கட்சிகளுக்கு குறைசொல்வது தான் வேலை. யாராவது குறை சொன்னால் காது கொடுத்து கேட்டு இந்த அரசு செயல்படுத்துகிறது.

மேலும் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். வரும் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தமிழக மக்களும் நம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். காமராஜரின் கொள்கைகளை செயல்படுத்துவதால் மக்கள் விரும்புகின்றனர். நமது பேரியக்கம் வளர்ந்து வருகிறது என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்மைச்சரிடம் 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா...? விஜய் கட்சியுடன் கூட்டணியா...? என்ற கேள்விக்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.

புதுச்சேரியில் இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி பதவி வகித்துள்ளார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகிய அவர், என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை 2011ஆம் ஆண்டில் தொடங்கினார். அந்தாண்டே சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்வரானார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2021 -ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி பெற்றார்.

தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக உள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com