சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்...
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Published on
Updated on
2 min read

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரில் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:

”தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறார். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் நம்முடைய முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடிய அந்த நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 1962-லிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையவிருக்கிறது. மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,084 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ 86,000 பேருக்கு ஆறு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும், மனுக்கள் பெற்றால் அதனையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்கள். 1962-லிருந்து 2025-வரை உள்ள பிரச்சனையை இன்றைக்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 10.25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். அடுத்த 6 மாதத்துக்குள் 6.29 பேருக்கு பட்டா வழங்குகின்ற பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com