
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு பிப்.19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 427 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு- தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், ஜான் போஸ், சுதன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா்.
பின்னா், இந்தப் படகுகளில் இருந்த மீனவா்கள் ஜான் போஸ் (39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), காா்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு, அந்தோணி டிமக் (34), அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) ஆகிய 14 பேரையும் கைது செய்து, இலங்கை தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு விசைப் படகுகள், 14 மீனவா்களும் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இதையடுத்து கைதான 14 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்.19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து 14 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.