
நமது சிறப்பு நிருபர்
ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தபோது, தங்களுக்கு எழும் கேள்விகளுக்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியிருந்தது. அந்தக் கேள்விகளின் விவரம் வெளியாகியுள்ளது.
அவற்றின் சுருக்கம் வருமாறு:
1. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை முதலாவது நடவடிக்கையிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநர், மீண்டும் அந்த மசோதாக்கள் பேரவையில் நிறைவேறி வரும்போது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாமா?
2. பேரவை வரம்பை மீறுவதாக கருதப்படும் மசோதா அல்லது மத்திய சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மட்டும்தான் தனது சுயவிருப்பத்தின்படி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாமா அல்லது அனைத்து மசோதாக்களையும் அனுப்பி வைக்க முடியுமா?
3. ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட வகை செய்கிறதா? அல்லது அவர் சுயவிருப்பத்தின்படியும் செயல்பட முடியுமா?
4. "பாக்கெட் வீட்டோ' என்பதன் கருத்தாக்கம் என்ன? அது அரசமைப்பு விதிகள் 111, 200 மற்றும் 201 ஆகியவற்றில் கருதப்படுகிறதா?
5. அரசமைப்பின் 200-ஆவது விதியின் முக்கியப் பகுதியில் இடம்பெற்றுள்ள "அறிவிக்கலாம்' என்ற சொற்றொடரை குறித்த காலத்துக்குள் ஆளுநர் அறிவிக்க வேண்டும் என கருதலாமா?
6. ஒரு நடவடிக்கையில் ஆளுநர் தனது ஒப்புதலுக்கு வந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு தகவலை அனுப்பி பேரவையை கேட்டுக் கொள்கிறார். இரண்டாவது நடவடிக்கையில், மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறார். மேற்கண்ட இரு சூழல்களிலும் தனக்கு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் கடமைப்பட்டவராகிறாரா? அல்லது முதல் நடவடிக்கையுடன் அவரது "ஒப்புதல் வழங்கும் அதிகாரம்' முடிந்து விடுகிறதா?
7. அரசமைப்பின் 200-ஆவது விதியின் கீழ் ஒரு மசோதாவுக்கு ஆளுநர், "ஒப்புதல் வழங்கலாம்', "ஒப்புதலை நிறுத்திவைக்கலாம்' மற்றும் "குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்' என மூன்று வாய்ப்பு உள்ளபோது, 200-ஆவது விதி முதல் பகுதி கடைசி வரியில் "அதன் பிறகு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என குறிப்பிடாமல் "ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைக்கலாகாது' என்று ஏன் கூறப்பட்டுள்ளது?
8. அவ்வாறென்றால் தனது ஒப்புதலுக்கு வந்த மசோதாவில் எதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என தாமாகவே தேர்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு தரப்பட்டுள்ளதா?
9. அரசமைப்பின் 200-ஆவது விதியை இரு பகுதிகளாகக் கருதி, முதல் பகுதியில் மசோதா மீது முடிவெடுப்பது ஆளுநரின் சுயவிருப்பத்துக்கு உள்பட்டதாகக் கருதலாமா மற்றும் இரண்டாவது பகுதியில், பேரவையிடம் மசோதாவை மறுபரிசீலனை செய்ய சுயாதீன சுயவிருப்பப்படி ஆளுநரால் கூற முடியுமா?
10. மசோதாவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை பேரவைக்கு வழங்காமல், அது நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தால் பிறகு பேரவை அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதுடன் அதை ஆளுநருக்கும் திருப்பி அனுப்ப முடியாது என கருதலாமா?
11. அரசமைப்பின் 201-வது விதியின் கீழ் குடியரசுத் தலைவர், பேரவைக்கு மசோதாவை திருப்பி அனுப்பும்படி ஆளுநருக்கு உத்தரவிட்டு, பிறகு அதே மசோதா பேரவையில் நிறைவேறி மீண்டும் குடியரசுத் தலைவரின் மறுபரிசீலனைக்கு வந்தால் அவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது?
12. அரசமைப்பின் 74-ஆவது விதியின்படி மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட கடமைப்பட்டுள்ள குடியரசுத் தலைவர், மாநிலப் பேரவையின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கட்டாயமற்றவராகிறாரா? மாநிலப் பேரவையால் மறுபரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என மத்திய அமைச்சரவை கேட்டுக் கொண்டால் அரசமைப்பு அத்தகைய சூழலை எவ்வாறு கையாளும்? ஆகிய கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.