மாநில தன்னாட்சி உரிமையைப் பறிக்க இந்தி திணிப்பு: விஜய்
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... கோடிகளால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.