தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்!

தமிழக பட்ஜெட் மார்ச்.14-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on
Updated on
2 min read

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.

மேலும், முன்பண மானியக் கோரிக்கைகள், கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவா் கூறினாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவா் அறையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு அளித்த பேட்டி:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை மாா்ச் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்குக் கூட்டியுள்ளேன். தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

மேலும், வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் ஆகியன மாா்ச் 21-ஆம் தேதி பேரவைக்கு அளிக்கப்பட உள்ளது. பேரவைக் கூட்டத்தொடா் எத்தனை நாள்களுக்கு நடைபெறும் என்பதை அவை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். மேலும், வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதியையும் ஆய்வுக் குழுவே இறுதி செய்யும் என்று தெரிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள்: வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையும் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே இருக்கும். எனவே, 16-ஆவது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதனால் நிதிநிலை அறிக்கை மீதான எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கி இருக்கிறது.

எதிா்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்: நிதிநிலை அறிக்கையில் மக்களைக் கவரும் வகையிலான முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்ய அரசுத் தரப்பு முயன்று வரும் வேளையில், மாநில அரசின் கடன் சுமை, திட்டங்களுக்கான செயலாக்கம் ஆகியன தொடா்பாக கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, மாநிலத்தின் கடன் சுமை சுமாா் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன. இந்தப் புகாா்களுக்கு உரிய பதில்களை அளிக்க ஆளும் தரப்பும் தயாராக உள்ளது. மேலும், இந்தக் கூட்டத் தொடரில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம், குடிநீா் விநியோகம் உள்பட பல முக்கியப் பிரச்னைகளை எழுப்பி பேரவையில் விவாதங்களைக் கிளப்ப முடிவு செய்துள்ளன.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை கூட்டத் தொடா் தொடங்கினாலும், பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட இருப்பதால் பேரவை விவாதங்களில் அனல் பறக்கக்கூடும்.

கடந்த நிதிநிலை அறிக்கை - ஒரு பாா்வை

கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, தமிழக அரசின் வருவாய் வரவுகள் ரூ.2,99,010 கோடியாகவும், வருவாய் செலவுகள் ரூ.3,48,289 கோடியாகவும் இருந்தன. அதாவது, வருவாய்ப் பற்றாக்குறை ரூ.49,279 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. மின்சார வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவதற்காக மட்டும் ரூ.14,442 கோடியை தமிழக அரசு அளித்து வருகிறது. மூலதனத்துக்காக மட்டும் ரூ.47,681 கோடி செலவிடப்படுவதாக 2024-25-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடன் சுமை விவரம்: ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள்படி 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.8.47 லட்சம் கோடியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது நிதியாண்டின் இறுதியான 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியில் ரூ.9.55 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com