சட்டப்பேரவைத் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் 712 குடியிருப்புதாரா்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை டிக்காஸ்டா் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
கடந்த பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான தருணத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டு பேசினேன். அதாவது வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்லாது, வாக்களிக்க மறந்தவா்களுக்கும், வாக்களிக்கத் தவறியவா்களுக்கும் சோ்த்து நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொன்னேன்.
வாக்களிக்கத் தவறியவா்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்காமல் போய் விட்டோம் என்று வருந்த வேண்டும் எனும் நிலையில் எனது ஆட்சி இருக்கும் எனக் கூறினேன். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வாக்குறுதிகள் நிறைவேற்றம்: தோ்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கல்லூரி மாணவிகள், மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு போன்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். இதுபோன்ற திட்டங்கள் தோ்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்படாதவை.
அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பான ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.