
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் நெய் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சர்ச்சைக்கு ஆளான திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், நெய் தவிர்த்து பால் விற்பனை, பதப்படுத்துதல் முதலான பிற விற்பனையைத் தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியதாவது, ``ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் 1995 முதல் நெய், வெண்ணெய், பால் பொருள்கள் உற்பத்தி தொழில் செய்து வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம், கடந்தாண்டு மார்ச்சில் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 2024 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 ஆம் தேதிமுதல் அக்டோபர், 10 ஆம் தேதிவரையில் 10 லட்சம் கிலோ நெய் அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் இருந்து எங்கள் நிறுவனம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கியது. திருப்பதி லட்டு தயாரிக்க எங்கள் நிறுவனம் மட்டும் இல்லாமல் வேறு 4 நிறுவனங்களிடம் இருந்தும் நெய் வாங்கப்பட்டது.
இதையும் படிக்க: நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?
நெய் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அனுப்பிய நெய்யில்தான் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நெய்யில் எந்த கலப்படமும் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், எங்கள் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மத்திய உரிமம் வழங்கும் அலுவலர் கடந்த வாரம் (பிப். 14) உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், 400 பேர் பணிபுரியும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் பால்கோவா, வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்களையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பொருள்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. நெய் விநியோகத்தில்தான் பிரச்னை. இந்த நிலையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் நிறுத்துவது சட்டவிரோதம்.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெருமளவில் கடன் பெற்றுள்ளதால், நெய் தவிர்த்து பிறகு பொருள்கள் வர்த்தகத்துக்கான உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திரத்தின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை எழுப்பினார். நாடு முழுவதும் பக்தா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இக்குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ இயக்குநரின் மேற்பாா்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.