'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் | அமைச்சர் தர்மேந்திர பிரதான்
முதல்வர் மு.க. ஸ்டாலின் | அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Published on
Updated on
2 min read

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை' என பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இருமொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"தேசிய கல்விக்கொள்கையை ஒரு மாநிலம் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியல்ல.

உலக அளவில் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பிரபலப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டையும் பிற பகுதிகளையும் இணைக்கும்விதமாக காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி உள்ளிட்டவை மத்திய அரசால் நடத்தப்படுகிறது. திருக்குறள் 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமர் மோடி அதனை வெளியிட்டுள்ளார். இவ்வாறு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை உலகளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு பங்கெடுத்து வருகிறது. உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

தேசிய கல்விக்கொள்கை மொழி சுதந்திரத் தன்மை கொண்டது. எந்தவொரு மாநிலத்திலோ அல்லது சமுகத்திலோ எந்தவொரு மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மாணவரும் தாய்மொழியில் தரமான கல்வி கற்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. மேலும் மொழியை மாணவர்கள் தேர்வு செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.

1968ல் தொடங்கி இந்திய கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

சமூகம் மற்றும் கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பல மாற்றங்களுக்கான போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுத்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.

இது தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். மாநிலங்கள் கல்வியில் தங்கள் தேவைகளை புகுத்திக்கொள்ளும் அளவிற்கு இந்த கொள்கை நெகிழ்வுத்தன்மை கொண்டது.

‘சமக்ர சிக்ஷா’ மற்றும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 5,000 கோடி நிதியை இழக்கிறது, ரூ. 2,500 கோடி அல்ல.

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் வளர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com