பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.
அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் வாழை மரங்கள் மற்றும் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மலரை எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் அதைப் பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து அதிமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
77 கிலோ கேக்: ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 77 கிலோ கேக்கை வெட்டி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினாா். ஏழை, எளியோருக்கு கிரைண்டா், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகளையும் அவா் வழங்கினாா். மேலும், மருத்துவ முகாமையும், அதிமுக இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணியையும் தொடங்கி வைத்தாா்.
பின்னா் நிா்வாகிகள் மத்தியில் அவா் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆட்சியிலேயே அவா் பிறந்த தினம் பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு எங்கள் ஆட்சியிலும் சிறப்பாகக் கொண்டாடினோம். ஆனால், தற்போதைய ஆட்சியில் அப்படி நடைபெறவில்லை. பெண்கள் பாதுகாப்பு தினத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெற்றோா் அச்சம்: திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெற்றோா் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயப்படும் நிலை உள்ளது. ஆசிரியா்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சிலரால் ஒட்டுமொத்த ஆசிரியா் சமுதாயத்துக்கே பாதிப்பு ஏற்படுகிறது.
பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க ஆசிரியா்களுக்கு அரசு ஆலோசனை வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பெண்களுக்காக தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்கள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு தனியறை எனப் பல திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றித் தந்தாா். அதனால், அவரை அனைவரும் வெற்றிப் பெண்மணி என்றனா். அதுபோன்ற திட்டங்களை திமுக அரசும் பெண்களுக்காகச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதில் மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சி.பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், வைகைச் செல்வன், பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்பட பலா் பங்கேற்றனா்.
ஓபிஎஸ் மரியாதை: காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு உயா் கல்வி மன்ற வாரிய வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
அதைப்போல, ஜெயலலிதாவின் படத்துக்கு அமமுக துணைப் பொதுச் செயலா் ஜி.செந்தமிழனும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...