சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன்: சீமான் மனைவி

நீலாங்கரை வீட்டின் நடந்த சம்பவம் பற்றி சீமான் மனைவி விளக்கம்...
சீமான்
சீமான்
Published on
Updated on
1 min read

வளசரவாக்கம் காவல்துறையினர் வீட்டின் முன்பு ஒட்டிய சம்மனை, படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று வியாழக்கிழமை சீமான் ஆஜராகாததால், வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு, சீமானின் நீலாங்கரை வீட்டின் கதவில், காவல்துறையினர் வியாழக்கிழமை பிற்பகல் சம்மன் ஒட்டினர்.

இந்த நிலையில், காவல்துறையினர் ஒட்டிய சம்மனை சீமானின் ஓட்டுநர் கிழித்தார். இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு சென்ற நீலாங்கரை ஆய்வாளர் பிரவீனுக்கு சீமான் வீட்டு காவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, சீமான் வீட்டு காவலரான முன்னாள் ராணுவ வீரரையும் ஓட்டுநரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கயல்விழி விளக்கம்

சீமான் வீட்டில் வியாழக்கிழமை நடந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் பேசியதாவது:

”வளசரவாக்கம் காவல்துறையினர் கொடுக்க வந்த சம்மனை முறைப்படி கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், வீட்டின் கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

வெளியே வந்து அதனை படிக்க எனக்கு சங்கட்டமாக இருந்ததால், நான்தான் சம்மனை எடுத்து வரச் சொன்னேன். அதனை எடுக்க முடியாததால், கிழிக்க நேரிட்டது. என்னை கைது செய்யாமல் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ வீரரிடம் அவர் அப்படி நடந்துகொண்டது முறையில்லை. ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்.

காவல்துறையினர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், நேற்று அவர்கள் நடந்துகொண்டது ஏற்றுக் கொள்ளமுடியாதது. மேலிடத்தின் அழுத்தத்தால் இவ்வாறு செய்துள்ளனர்.

காவலர் வைத்திருந்த துப்பாக்கியை போலீஸிடம் கொடுக்கவே வெளியே எடுத்தார். மிரட்டுவதற்காக இல்லை. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அடித்துள்ளனர். ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்வேம்.

சீமான் பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதால் எங்களுக்கு வழக்கின் மீதெல்லாம் பயமில்லை. சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணியளவில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com