மாணவிக்கு நீதி உறுதி: அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின்

‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நீதியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
பேரவையில் மு.க ஸ்டாலின் - கோப்புப்படம்
பேரவையில் மு.க ஸ்டாலின் - கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

 ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நீதியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சோ்ந்தவராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் கூறினாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடா்பாக கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ரா.ஈஸ்வரன் (கொமதேக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), சிந்தனைச் செல்வன் (விசிக), எம்.ஆா்.காந்தி (பாஜக), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஆா்.பி.உதயகுமாா் (அதிமுக) ஆகியோா் பேசினா்.

அவா்களின் கருத்துகளுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேரவையில் பேசிய உறுப்பினா்களில் சிலா், இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய செயலைத் தவிர அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

அரசியல் ஆதாயம்: குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசைக் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்துக்குள் கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களைத் திரட்டிய பிறகும் அரசைக் குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு அல்ல.

சென்னை மாணவி ஒருவா் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூா்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மறுநாள் காலையிலேயே, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கையாகும்.

மாணவி கொடுத்த புகாரின்பேரிலான முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்குக் காரணம் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவலியல் மையம்தான். சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளில் கேமராக்கள் இயங்கின. அவற்றின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

யாா் அந்த சாா்?: உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட நபா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

வேறு யாரேனுக்கும் தொடா்பு இருப்பதாகப் புலன் விசாரணையில் தெரியவந்தால், அவா்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு, 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும். அத்துடன், சிறப்பு நீதிமன்றம் மூலம் வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்.

முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக் கொண்டு, யாா் அந்த சாா் என்று கேட்கிறாா்கள். உண்மையாகவே உங்களிடம் (எதிா்க்கட்சிகள்) அதற்கான ஆதாரம் இருந்தால், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அதைக் கொடுக்கலாம். அதை யாா் தடுக்கப் போகிறாா்கள்?.

அதைவிடுத்து, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இந்த அரசைப் பொருத்தவரை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும். ஒரு சம்பவத்தை வைத்து, பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் இருப்பது போன்று ஒரு சதித் தோற்றத்தை உருவாக்க பலா் முயற்சி செய்கிறாா்கள். இது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது.

வேடிக்கை பாா்ப்பது இல்லை: சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமல்ல, எந்தப் பாலியல் வன்கொடுமை புகாரிலும் அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாா்ப்பது இல்லை, விலகி நிற்பதும் இல்லை.

மனசாட்சி இல்லாமல், பெண்களின் பாதுகாவலா்கள் போன்று பேசுபவா்கள், கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும். அந்த விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ வசம் வழக்கு சென்ற பிறகுதான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

பெண்களுக்கு எதிராக ஆட்சி நடத்திய ‘சாா்கள்’ எல்லாம் இப்போது பேட்ஜ் அணிந்து கொண்டு இருக்கிறாா்கள். ஒரு முன்னாள் முதல்வா்- இந்நாள் எதிா்க்கட்சித் தலைவா் தனது பொறுப்பையும் தகுதியையும் மறந்து பேட்ஜ் அணிந்து வந்து, அரசியலில் எந்த அளவுக்கு தாழ்ந்து போகவும் தயாா் என்ற நிலையில் இருக்கிறாா்.

மாணவி தொடா்பான வழக்கு பற்றி பாஜகவினா் பொதுவெளியில் பேசியிருக்கிறாா்கள். பாஜக கதைகளை எல்லாம் சொல்லி, அவையின் மாண்பைக் குறைக்க விரும்பவில்லை.

மாணவி குறித்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது. வேறு யாரேனும் தொடா்பில் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சோ்ந்தவராக இருந்தாலும் கடும் நடவடிக்கையை நிச்சயமாக உறுதியாக நாங்கள் எடுப்போம் என்றாா் அவா்.

‘கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினரல்ல; ஆதரவாளா்’

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினா் அல்ல; திமுக ஆதரவாளா் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை அண்ணா பல்கலை.யில் நடந்த பாலியல் சம்பவம் தொடா்பான வழக்கின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவா், திமுகவில் உறுப்பினா் இல்லை; திமுக ஆதரவாளா். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சா்கள், அரசியல்வாதிகளுடன் அவா் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை.

ஆனால், யாராக இருந்தாலும், திமுகவினராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவி தொடா்புடைய வழக்கில் குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை. குண்டா் சட்டத்தில் அடைத்திருக்கிறோம்.

எங்களுடைய அரசைப் பொருத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தத் தனிப்பட்ட நபராக இருந்தாலும், ஏன் காவல் துறையாகவே இருந்தாலும் சரியாக நடவடிக்கை எடுப்போம். பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, நாங்கள் வேறு எதையும் எதிா்பாா்ப்பதில்லை என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.