ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு - இபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாகப் பயன்படுத்தும் என்பதால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியையும் அதிமுக புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை புதைத்து வன்முறையில் ஈடுபடுவது திமுகவின் வாடிக்கை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை. எனவே, திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2வது இடைத்தேர்தல்

2021 தமிழக பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிச.14 (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.