மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை(ஜன.180 காலை தொடங்கியது. ஒரு நாள் மாநாடாக சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் தந்தை பெரியார் முற்றத்தில், பேரறிஞர் அண்ணா திடலில், டாக்டர் கலைஞர் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டை, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, தங்கம் தென்னரசு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளரும் எம்.பி.-யுமான ஏ.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து தந்தை பெரியார் திருவுருவப் படத்தை சட்டத்துறைத் தலைவர் இரா.விடுதலை, பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்தை என். ஆர்.இளங்கோ, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் படத்தினை சட்டத்துறை இணை செயலாளர் கே.எம்.தண்டபாணி, டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படத்தினை சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, பேராசிரியர் திருவுருவப் படத்தினை சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் இந்த மாநாட்டில் முதல் அமர்வில் "ஒரு நாடு ஒரு தேர்தல்" என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் 'திராவிடவியல்' என்ற புதுமையான தலைப்பிலும், 3-வது அமர்வில் "இந்திய மக்களாகிய நாம்" என்ற தலைப்பிலும் சிறப்பு கருத்துரை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனிடையே இந்த மாநாட்டுக்கு கழக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வர முடியாத காரணத்தினால், அவரது வாழ்த்து செய்தியை எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் வாசித்தார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. திமுக சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதிலும், சட்டரீதியான போராட்டங்களை நடத்தி பல உரிமைகளை வென்றெடுப்பதிலும், பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது திமுக சட்டத்துறை.

மேலும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி.

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம். மத்திய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திமுக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில், திமுக சட்டத்துறை, மூன்றாவது மாநில மாநாடு நடத்துவதை எண்ணி, மகிழ்ச்சியடைகிறேன். அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும், அரசியல் சட்டத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிக்கும் வகையிலும், இந்த மாநாட்டின் கருத்தரங்கும் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது. சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமைகள், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை சட்டரீதியாக நிலைநாட்டும் வகையில், திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com