உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

சநாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை
Published on

நமது நிருபா்

புது தில்லி: கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பிரசன்ன பி. வரலே ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்திய அரசமைப்புச்சட்டம் 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் எப்படி பராமரிக்கத்தக்கதாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியது. மேலும், மனுக்களை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தது.

அப்போது, மனுதாதா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தமா சேஷாத்திரி நாயுடு, மாற்று வகையில் பரிகாரம் தேடும் வகையில் மூன்று மனுக்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, சட்டத்தின் கீழ் மாற்று நிவாரணங்களைப் பெறும் வகையில் நீதிமன்றம் சுதந்திரம் அளித்தது. மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டன.

முன்னதாக, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, சம்பந்தப்பட்ட மனுக்கள் பராமரிக்கத்தக்கவை அல்ல என்று வாதிட்டாா். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் சம்பந்தப்பட்ட மனுதாரா்களின் கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தாா்.

சென்னையில் 2023, செப்டம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) சநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசும்போது சநாதன தா்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டுப் பேசியதாக தாக சா்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில், மஹாராஷ்டிரம், பிகாா், கா்நாடகம், ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு தரப்பினா் வழக்குகளைத் தொடா்ந்தனா். சில காவல் நிலையங்களிலும் புகாா்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக மாற்றி அவற்றின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்குகளில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பி.ஜெகந்நாத், வினீத் ஜின்டல் மற்றும் சநாதன் சுரக்ஷா பரிஷத் ஆகியோா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com