
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள், நிலப் பத்திரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள் பெங்களூரு விதானசௌவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கா்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், கா்நாடக அரசுக்கு வழக்கு செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியை செலுத்திவிட்டு ஆபரணங்களை பெற்றுக் கொள்ள கடந்தாண்டு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, சொத்துகள் தங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோா் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீபக், தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள், நிலப் பத்திரங்கள் உள்ளிட்டவை பிப். 14, 15 தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க புதன்கிழமை பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், போதுமான போலீஸ் பாதுகாப்புடன் இரும்பு பெட்டிகளை எடுத்துக் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர கர்நாடக காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நகைகளை எடுத்துச் செல்லும்போது அளவிடும் மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும் என்றும் முழு நடவடிக்கைகளும் விடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.