ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
Published on
Updated on
2 min read

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(ஜூலை 1) காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

நாளை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூலை 23-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாளான ஜூலை 1 -ஆம் தேதி நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.

பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர்.

தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது.

இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசனம்: ஜூலை 2-ஆம் தேதி(புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது.

அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். வியாழக்கிழமை(ஜூலை 3 ஆம் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை(ஜூலை 4-ஆம் தேதி) தெப்போற்சவத்துடம் விழா முடிவடைகிறது

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ரமேஷ்பாபு ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகராட்சி ஆணையர் டி.மல்லிகா ஆகியோர் செய்திருந்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்

Summary

The chariot procession was held on Tuesday in a grand manner on the occasion of the Anithrumanjana festival at the Nataraja temple located in Chidambaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com