
சென்னை: பல்வேறு பணிகள் இருந்தாலும், இளம்தலைமுறை மாணவர்களை சந்திக்கும்போது எனர்ஜி வந்துவிடுகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் கல்வி பயிலும் வாய்ப்பினை ஜமால் முகமது கல்லூரி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நம் முன் காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்கிற வழிகள் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் யாரும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது - திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா ஆண்டின்துவக்கம் மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் ஜமால் முகமது கல்லூரிக்கு வருகை தந்தார். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லூரி பவள விழா ஆண்டின் துவக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது
முதல்வராக நான் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டம், அரசுப் பணி என தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் உங்களைப் போன்ற இளம் தலைமுறை மாணவர்களை சந்திக்கும்பொழுது எனக்கு எனர்ஜி வருகிறது.
ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் நாட்டுக்கு வழிகாட்டக்கூடிய கல்லூரி ஆக இந்த கல்லூரி உள்ளது. இங்கு உங்களிடையே உருவாகும் நட்பு எல்லா காலத்திலும் தொடர வேண்டும். அது சமுதாயத்திலும் எதிரொலிக்க வேண்டும்.
இந்த கல்லூரியை ஜமால் முகமது மற்றும் காஜாமியன் ராவுத்தர் இருவரும் சேர்ந்து தொடங்கினார்கள். ஜமால் முகமது காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அவர் பங்கேற்று உள்ளார். சுதந்திர போராட்டத்திற்காக தொகையை பூர்த்தி செய்யாத காசோலையை கொடுத்தவர்.
காஜாமியான் ராவுத்தர் கதர் ஆலை நடத்தி இலவசமாக அதனை மக்களுக்கு விநியோகம் செய்தவர். அவர்கள் இருவரும் காந்தி வழியில் வாழ்ந்தவர்கள்.
நம் முன் காந்தி வழி, பெரியார் வழி, அம்பேத்கர் வழி என நமக்கு பல வழிகள் உண்டு. ஆனால் மாணவர்கள் எப்போதும் கோட்சே கூட்டத்தின் வழியே சென்று விட கூடாது.
மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம் அதுதான் உங்களின் நிலையான சொத்து. மாணவர்கள் சமூக அக்கறை நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.
உங்களுடைய முன்னாள் மாணவர்கள் பட்டியலில் பல ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையிலும் கே.என்.நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தான்.
உங்க சீனியர்கள் எங்க கேபினேட்டில் சீனியர்கள்.... நாளை உங்களிடம் இருந்து கூட ஒருவர் இந்த பட்டியலில் வரலாம் வரணும். ஓரணியில் தமிழ்நாடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை அரசியல் புரிதல் மாணவர்களுக்கு வேண்டும் என்பதற்காக பேசுகிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிதான் நமக்கு முக்கியம், அதற்கு அடிப்படை தான் கல்வி. அதற்காகத்தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
நான் முதல்வன் திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ் சமுதாயத்தை அறிவு சமுதாயமாக வளர்த்தெடுக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.
கல்வி நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. நம் தலைவர்கள் நடத்திய சமூக நீதி போராட்டத்தால் கிடைத்தது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலைமை மாறி இன்று அனைவரும் படிக்கின்றோம். சமூக நீதி போராட்டத்தின் பலன் தான் நாம் இன்று பார்க்கும் தமிழ்நாடு. தமிழ்நாட்டை காக்க மாணவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும். அதற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதுணையாக இருப்பேன். இஸ்லாமியர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திமுக எப்போதும் இருக்கும் இது நான் உங்களுக்கு கொடுக்கும் உறுதி. யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி என்றார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, நவாஸ் கனி, சல்மா, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.