
அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது, நள்ளிரவில் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்றது. இதில் மூன்று பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் அவ்வப்போது சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் ( மேற்கு ) அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது தக்கோலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் எண் 44 இல் பணியில் இருந்த ஊழியர் கார்த்திகேயன் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து சேந்தமங்கலம் ரயில்வே கேட் எண் 40 பணியில் இருந்த ஊழியர் ஆஷிஷ் குமார் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் ( மேற்கு ) உத்தரவிட்டார்.
தொடர்ந்து இது போன்ற சோதனைகள் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் அடிக்கடி நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.