
இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இளையராஜா தொடர்ந்திருக்கும் வழக்கில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், சம்பந்தப்பட்ட பாடலை, எக்கோ நிறுவனத்தின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தியதாகவும், மனுதாரருக்கும் எக்கோ நிறுவனத்துக்கும் இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.