காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!

காமராஜர் விவகாரம் குறித்து பேசிய ஸ்டாலின் கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர் என வலியுறுத்தினார்.
காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்
காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று தமிழக முதல்வர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

பெருந்தலைவர் குறித்து பொது வெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராசருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என அண்ணா முடிவு செய்தார். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற ஒன்று சேர்ந்து உழைப்போம், வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது குறித்து, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!

பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.

உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!

அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.

சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை குறித்து காமராஜர் கண்டனம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உள்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த, தான் உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

திருச்சி சிவாவின் இந்தப் பேச்குக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்திருந்தார். "திருச்சி சிவா ஆதாரமில்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதியில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிவாவின் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com