
கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டியை ஓட்டி அங்கு கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. திமுகவிடம் எப்போது கை நீட்டி பணம் வாங்கினீர்களோ, அப்போதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது. மக்கள் பிரச்னைகளை கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில்லை.
பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை. இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் போராடவில்லை. வரலாறு படைத்த கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என நல்லெண்ணத்தில் சொல்கிறேன். திமுகவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த அவர், தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.