கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆசிரியா்கள்-பணியாளா்களுக்கான பொது வருங்கால வைப்புநிதி, பங்களிப்பு ஓய்வூதிய பணிகளை விரைவுபடுத்த கல்வித் துறை உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கும் பணிகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கும் பணிகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிதித் துறை முதன்மைச் செயலரின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், அலுவலகங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்), இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை (டிசிஆா்ஜி), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்) தொடா்பான பணிகள் அதிகளவில், உரிய காரணங்கள் ஏதுமின்றி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலக் கணக்காயா் உத்தரவு அளித்தும் கூட தடையின்மைச் சான்று நிலுவையில் உள்ளது.

அதனால் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வரும் டிசம்பா் மாதம் வரை ஓய்வு பெற்ற, ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களின் ஓய்வூதியம், பொது வருங்கால வைப்பு நிதி கருத்துருக்களை மாநில கணக்காயா் அலுவலகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியக் கருத்துருக்களை அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும் கால தாமதமின்றி வரும் ஜூலை 28-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிவுறுத்தலைத் தொடா்ந்து சனிக்கிழமை (ஜூலை 19) ஓய்வூதிய நிலுவை தொடா்பான பணிகளை முடிக்கும் வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கூட்ட அமா்வு (ஜாயிண்ட் சிட்டிங்) நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் இது தொடா்பாக மாவட்ட கண்காணிப்பாளா்களாக செயல்படும் இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் இணையவழியில் ஆய்வுகள் நடத்தியும், மாவட்டங்களுக்கு நேரில் செல்லும்போது மாவட்ட அலுவலா்களை ஆய்வு செய்து ஒரு வார காலத்துக்குள் மாநில கணக்காயா் அலுவலகத்துக்கு கால தாமதமின்றி அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com