
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளா்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவினர் சட்டவிரோதமாக பொதுமக்களின் ஆதார் விவரங்களைச் சேகரிக்கின்றனா். இதுதொடா்பாக மத்திய அரசு, ஆதார் தலைமைச் செயல் அலுவலர் ஆகியோா் விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுகவினா் பொதுமக்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கின்றனா். இதனடிப்படையில், தொடா்புடையோருக்கு ஒரு முறை கடவுச்சொல் எண் அனுப்பப்படுகிறது. அந்த எண்ணை திமுகவினர் கேட்டுப் பெறுகின்றனர். மேலும், இந்தத் திட்டப்படி உறுப்பினராகாவிட்டால் மகளிர் உரிமைத் தொகை போன்ற சலுகைகள் கிடைக்காது என அவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர் என மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் கே.ஆர். பாரதிகண்ணன் வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ‘ஒரு முறை கடவுச்சொல் எண் எதற்காக கேட்கப்படுகிறது? ஒரு முறை கடவுச்சொல் எண்ணை மற்றவா்களிடம் பகிர வேண்டாமென காவல் துறையினா் அறிவுறுத்தி வெளிப்படையாக விளம்பரம் செய்யும் நிலையில், எதற்காக இந்தக் கடவுச்சொல் எண் கேட்கப்படுகிறது? ஆதார் விவரங்களைச் சேகரிக்கும் தனியாா் நிறுவனம் அந்த விவரங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய நாட்டு மக்களை இவ்வாறுதான் கையாளுவதா?’ என கேள்வி எழுப்பினர்.
தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசமைப்பின் கடமை. ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெறும் பிரபல கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில், தனி நபர் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் தனியாா் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், இந்த உறுப்பினர் சோ்க்கையின் போது, வாக்காளா்களிடமிருந்து கடவுச்சொல் எண் பெறுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சோ்க்கையை நடத்தலாம். ஆனால், கடவுச்சொல் விவரங்களை பொதுமக்களிடமிருந்து கோரக் கூடாது என்று தெரிவித்து இவ்வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆதார் விவரங்கள் ஏதும் பெறவில்லை என்றும் தவறான தகவலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறவே ஓடிபி எண் பெறப்பட்டுள்ளதாகவும் வேறு ஆவணம் எதுவும் பெறவில்லை என்றும் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.