
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் முடிவாகியுள்ள நிலையில், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டிட முடிவெடுத்துள்ளன. இதனால், தமிழகப் பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட மும்முனை அல்லது நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திமுகவுக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. இந்த நிலையில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ள அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் தவெக தனித்துப் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்!” எனப் பதிவிட்டுள்ளது.
இதையும் படிக்க : குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.