
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், ஆஞ்சியோ பரிசோதனையில் முதல்வருக்கு அடைப்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், பரிசோதனையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டதாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து துரைமுருகன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”முதல்வருக்கு இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு அடைப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து 4-வது நாளாக மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.