பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

பொதுப்பணித் துறை சாதனைகள் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கம் தொடர்பாக...
கண்ணாடி இழைப் பாலம்
கண்ணாடி இழைப் பாலம்
Published on
Updated on
2 min read

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும்-வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக்குரிய துறையாகும்.

ரூ. 240.53 கோடியில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை

2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓர் ஆண்டு காலத்தில் சென்னை கிண்டியில் ரூ. 240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை 6 தளங்களுடன் கட்டி 15.6.2023 அன்று திறந்து வைத்தார்.

கொளத்தூரில் அரசு பெரியார் மருத்துவமனை

கொளத்தூர் தொகுதியில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் 3 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் இந்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படத் திட்டமிட்டு 2024 மார்ச் மாதம் 7 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தம் 210 கோடியே 80 லட்சம் ருபாய் செலவில் 6 அடுக்குத் தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்கம்- நவீன ரத்த வங்கி- புற்று நோயியல் பிரிவு- குழந்தைகள் நலப்பிரிவு- நரம்பியல் பிரிவு- மகப்பேறு பிரிவு என்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து வசதிகளோடும் மிகப் பிரம்மாண்டமாக உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ. 4179 கோடியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள்

அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், ஆகிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டடங்கள் ரூ. 4179 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் ரூ. 218 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

குமரிமுனையில் கண்ணாடி இழைப் பாலம்

முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவாக திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ. 37 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தினைக் கட்டி, 30.12.2024 அன்று திறந்து வைத்தார்.

முதல்வரால் இவை மட்டுமல்லாமல், மேலும் பல புதிய கட்டமைப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

* புதுடெல்லி சாணக்கியபுரியில் ரூ. 257 கோடியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வைகை தமிழ்நாடு இல்லக் கட்டடங்கள்.

* கோவை மாநகரில் கட்டப்படும் ரூ. 300 கோடி மதிப்பிலான தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்.

* திருச்சி மாநகரில் கட்டப்படும் ரூ. 290 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

* செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் முதலிய பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் பல்வேறு உயர் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has stated that the achievements of the Public Works Department under Chief Minister M.K. Stalin's rule have resulted in the construction of beautiful buildings that reflect architectural splendor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com