

அவிநாசி பகுதியில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாக அகற்றக் கோரி அவிநாசி பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து திங்கள்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக அமைப்பினர், வியாபாரிகள், அனைத்துக் கட்சியினர், நகர் மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கூறியதாவது-அவிநாசி பழைய-புதிய பேருந்து நிலைய கோவை பிரதான சாலை, குறிப்பாக அவிநாசி-சேவூர் சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் அவ்வப்போது, வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஆகவே உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து மனுக் கொடுத்து போராடி வருகிறோம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்வதால், தொடர்ந்துஉயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத் துறையினர் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர். வளர்ந்து வரும் அவிநாசி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்காக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவிநாசியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.