
காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தற்போது தென் தமிழகத்தில் பிரசாரத்தைத் துவங்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தின் கீழடி பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, காவல் துறையினர் தாக்கியதில் பலியான அஜித்குமாரின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவரது தாய், சகோதரர் நவீன்குமாருக்கு ஆறுதல் கூறிய அவர், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மடப்புரம் காவலாளி தாயார் மற்றும் சகோதரரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். காவல் துறையினரால் தாக்கப்பட்டு காவலாளி உயிரிழந்தது மிகுந்த வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியது.
அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டுமென அதிமுக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. மேலும், சிபிஐயிடம் விசாரிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அஜித்குமார் கொலையில், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அஜித் குமாருக்கு 44 இடங்களில் தாக்கப்பட்ட காயம் இருந்துள்ளது. இதற்கு முழு பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காவல் துறையினர் தாக்கியதில் காவலாளி அஜித் குமார் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் போனில் ஆறுதல் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்திருந்தார். அவர்களைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பலியான அஜித்குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.